கோழி தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காசோளம், சோளம், கம்பு, குறுனை அரிசி, கருவாடு மற்றும் பிண்ணாக்கு போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அசோலா என்ற நீர்த்தாவரத்தை கோழிகளுக்கு புரதச்சத்து மிகுந்த தீவனமாகப் பயன்படுத்தி நாட்டு கோழி இறைச்சி உற்பத்திச் செலவினை கணிசமாகக் குறைக்க முடியும்.
அசோலா:
அசோலா நீர் நிலைகளில் மிதவை தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்த பச்சை நிறமுள்ள தாவரமாகும். அசோலாவில் 25-27% புரதச்சத்து, 9-11% நார்சத்து, 3-4% கொழுப்பு சத்து, 45-50% மாவுச்சத்து, மற்றும் கோழிகளுக்கு உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறுபட்ட தாது உப்புக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் பல நுண்ணுட்டச் சத்துக்கள் காணப்படுகிறது. எனவே கோழிகளுக்கு தினமும் 3 முதல் 10 கிராம் வரை அசோலாவை தீவனத்தில் அளிப்பதன் மூலம் தீவனச் செலவை குறைப்பதோடு சுவையான மற்றும் ஆரோக்கியமான நாட்டு கோழிகளை உற்பத்தி செய்து வணிக ரீதியாக மக்களை அதிகமாக திருப்தி செய்யலாம்.